அச்சமும், துக்கமும் இல்லாதவர்கள் யார்?
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 10-62 எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 46-13 யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” 2-38 எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7-35 நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 6-48 முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 5-69 எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-112 யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2-274