அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: மறுமை நாளில் செயல்களை எடை போடும் மீஜான் எனும் எடைத் தட்டில் வைக்கப்படும் பொருள்கள் அனைத்திலும் மிகவும் கனம் வாய்ந்தது நற்குணமே!
அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதி
விளக்கம்
நற்குணங்களும் நன்னடத்தையும் தான் மனித வாழ்வின் உண்மையான அழகு ஆகும். உண்மையான மனித நடத்தையோடு இயைந்து போவது நற்குணமும் நன்னடத்தையும்தான். எனவே மீஜான் எனும் எடைத்தட்டில் எல்லா செயல்களை விடவும் மிக அதிகமான கனம் வாய்ந்ததாக நற்குணமும் நன்னடத்தையும் இருப்பது இயல்பான ஒன்றே.
மனிதனிடம் என்னென்ன வாழ்க்கை வசதிகள் உள்ளன? எத்தனை மகிழுந்துகள் உள்ளன? மாட மாளிகைகள் எத்தனை? போன்ற விவரங்களைக் கொண்டு எவரும் மனிதனை அடையாளம் காண்பதில்லை. ஆள் எப்படி? குணம் எத்தகையது? நடத்தை எப்படி என்பதைக் கொண்டே ஒரு மனிதன் உண்மையாக அடையாளம் காணப்படுகிறான்.
உலகில் என்ன சம்பாதித்தாய்? எத்தனை மகிழுந்துகளை வைத்திருந்தாய்? வங்கி இருப்பு எவ்வளவு சேமித்திருந்தாய்? எந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தாய் என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டான். எத்தகைய ஆளுமையுடன் எத்தகைய குணங்களுடன் வந்துள்ளாய் என்பதுதான் அசல் கேள்வியாக இருக்கும்.
ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒருவரின் சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நற்குணம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டே அவருடைய ஆளுமை அமையும்.
ஒருவர் என்னதான் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக, செல்வாக்கு மிக்கவராக, அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரிடம் நற்குணமும், நன்னடத்தையும் உயர் பண்புகளும் இல்லாமல் போனால் உண்மையில் அவர் பஞ்சப் பராரியான, இழிவான பிறவியே ஆவார்.