வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

ஏகத்துவம் பற்றிய ஐம்பது வினா விடைகள்

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தமது மார்க்கத்தை உயிரினும் மேலாக மதித்து அதன் அடிப்படைகளாகத் திகழும் ‘தவ்ஹீத்’ என்னும் ஓரிறைக் கொள்கையையும்,’ஈமான்’என்னும் நம்பிக்கையையும்,’இஸ்லாம்’என்னும் மார்க்கத்தின் மிக முக்கியக் கடமைகளையும்,’இஹ்ஸான்’என்னும் ‘ இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்ற தூய உணர்வோடு வணக்க வழிபாடுகளையும் நற்செயல்களையும் ஆற்றவேண்டும்’ என்ற நெறியையும் தெரிந்து கொள்ளவேண்டியது கட்டாயக் கடமையாகும்.அவை பற்றி கீழே விரிவாகக் காண்போம்.

‘தவ்ஹீத்’

1. தவ்ஹீத் (இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை) என்றால் என்ன ?

அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்கு முழுத்தகுதியும் பெற்றவன் என்பதையும், தனது தன்மைகளாக அல்லாஹ் குர்ஆனில் கூறிக்காட்டுபவற்றையும், அவனது திருத்தூதர் நபி (ஸல்) அவர்களால் நமக்குச் சொல்லிக்காட்டபட்ட அல்லாஹ்வின் ஏனைய தன்மைகளையும் உறுதிப்படுத்துவதற்குத்தான் ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

2. தவ்ஹீதின் வகைகள் யாவை?

அவை மூன்று வகைப்படும்.
1. தவ்ஹீதுர் ருபூபிய்யத்
2. தவ்ஹீதுல் உலூஹிய்யத்
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்.

3. தவ்ஹீதுர் ரூபூபிய்யத் என்றால் என்ன?

படைத்தல், உணவளித்தல், காத்தல், உயிரளித்தல், மரணிக்கச்செய்தல் போன்ற அனைத்துச் செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன், எதிலும் எந்த வகையிலும் யாருக்கும் ஒப்புவமை இல்லாதவன் என மன மொழி மெய்களால் உறுதி கொள்வதற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யத்’ என்று சொல்லப்படும். இவையாவற்றிலும் அல்லாஹ் ஒருவனே தனித்துச் செயல்படுகிறான்.அவற்றில் யாருடைய உதவியும், துணையும், தலையீடும் இல்லை.

4. ‘’தவ்ஹீதுல் உலூஹிய்யத்” என்றால் என்ன?

தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்ஜு, பிரார்த்தனைகள்,சத்தியம் செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப்பலியிடுதல் போன்ற அனைத்து வகை வழிபாடுகளும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆற்றப்படவேண்டும என்று உறுதிப் படுத்துவதற்குப் பெயர் தான் ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ எனப்படும்.

அதாவது : வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யப்படவேண்டும்.

5. ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்றால் என்ன?

அல்லாஹ்வின் அனைத்துத் திருநாமங்களையும், பண்புகளையும் அவனது மாண்புக்குப் பொருந்தும் வகையில் குர்ஆன்,ஹதீஸ்களில் கூறப்பட்டவாறு உறுதிப்பட நம்புவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத’; எனப்படுகிறது.

‘இபாதாத்’

6. ‘ இபாதத்’ என்ற வணக்க வழிபாடு குறித்து விளக்குக.

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் வெளிப்படையாகவோ, அந்தரங்கமாகவோ செய்யப்படும் செயல்களையும் சொல்லப்படும் வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்ட சொல் தான் ‘ இபாதத்’ என்ற வணக்க வழிபாடாகும்.

7. ‘இபாதத்’ என்ற வழிபாடு செய்வதற்குரிய நிபந்தனைகள் யாவை?

இபாதத்தின் நிபந்தனைகள் இரண்டாகும். அவை:-

1. எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்ற தூய்மையான நிய்யத் (எண்ணம்) வேண்டும். அதை பிறரிடம் காட்டுவதற்காகவோ, பிறர் பாராட்டவேண்டுமென்பதற் காகவோ, பிறரிடம் பரிசு பெறவேண்டுமென்பதற்காகவோ செய்யக்கூடாது.

2. எல்லா வணக்க வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அமைய வேண்டும். இதுவே நபியைப் பின்பற்றும் முறையாகும்.

8. சில வகை வணக்க வழிபாடுகளைக் கூறுக.

அவை தொழுகை, நோன்பு, கடமையான தர்மம்(ஸகாத்), ஹஜ்ஜுப்பயணம், அல்லாஹ்வை அஞ்சுதல், அல்லாஹ்வின் கருணைமீது ஆதரவு வைத்தல், அல்லாஹ்வின் உதவியை நாடுதல் மற்றும் அல்லாஹ் கட்டளையிடும் ஏனைய வணக்க வழிபாடுகள் ஆகும்.

‘ஷிர்க்’

9. அல்லாஹ் தடைசெய்துள்ள செயல்களில் - பாவங்களில் - மிகவும் முதன்மையானது எது?

அல்லாஹ் தடை செய்துள்ள செயல்களில் மிகவும் முதன்மையானது ‘ஷிர்க்’ இணை வைத்தல் என்னும் கொடிய பாவமாகும்.

10. ‘ஷிர்க்’ இணை வைத்தலுக்குரிய தண்டனைகள் என்னென்ன?

1. ‘ஷிர்க்’ இணை வைத்தலுக்கு இறைவனிடம் மன்னிப்பே கிடையாது.(அல்குர்ஆன்4:48)
2. அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும். .(அல்குர்ஆன்46:5)
3. இணைவைப்பவனின் எந்த வணக்கமும் இறைவனால் ஏற்கப்படுவதில்லை.(31:13,26:213)
4. நிரந்தர நரகமே அதற்குரிய தண்டனையாகும். (அல்குர்ஆன் 5:72)
5. சுவர்க்கம் ஹராமாகிவிடும் (தடுக்கப்பட்டுவிடும்) (அல்குர்ஆன் 5:72)

11. இணை வைத்தல் ( பல தெய்வ வழிபாடு ) என்றால் என்ன?

அல்லாஹ்வின் செயல்பாடுகளில் அவனுக்குத் துணையாக வேறு ஒருவர் இருக்கிறார் என நம்புவதற்கு ‘ஷிர்க்’ என்று பெயர். அதாவது அல்லாஹ்வுக்கு கூட்டாளிகளை நியமிப்பதும், அல்லாஹ்வின் உரிமைகளில் இன்னொரு போட்டியாளரை நிறுத்துவதும் இணைவைத்தல் ஆகும். அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளை ‘சமாதிகள்-கப்ருகள்-, அவ்லியாக்கள், மகான்கள்;, மதகுருமார்கள், சிலைகள், கற்கள், சூரியன், சந்திரன் நெருப்பு, காற்று, பாம்பு, மிருகங்கள் போன்ற இறைவனின் படைப்புகளுக்குச் செய்தாலும் அது ‘ஷிர்க்’ - இணைவைத்தல் ஆகும்.

12. ‘ஷிர்க்’; (இணைவைத்தலின்) வகைகள் யாவை?

1.’அஷ்ஷிர்குல் அக்பர்’ பெரிய இணை வைத்தல். (Major Shirk)
2.’அஷ்ஷிர்குல் அஸ்கர்’ சிறிய இணைவைத்தல் (Minor Shirk)
3.’அஷ்ஷிர்குல் கபிய்யி’ மறைமுக இணைவைத்தல் (Hidden Shirk)
ஆகிய மூன்றுமாகும்.

13. ‘அஷ்ஷிர்குல் அக்பர்’ பெரிய இணை வைத்தல் என்றால் என்ன ?

அல்லாஹ் அல்லாத வேறு எவருக்கும் எந்த படைப்புக்கும் எந்த ஒரு வகையிலும் செலுத்தப்படும் வழிபாடாகும். இந்த நிலையில் மரணிக்கும் எவரையும் அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். அவனுடைய நல்லறங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். மேலும் அவன் இஸ்லாத்திலிருந்தும் வெளியேறிவிடுகிறான். (பார்க்க: கேள்வி எண் 10)

14.’அஷ்ஷிர்குல் அக்பர்’ பெரிய இணை வைத்தலின் வகைகள் யாவை?

அவை பலவாகும். அவற்றுள் சில :

1.பிரார்த்தனைகளில் இணைவைத்தல் :

அல்லாஹ் அல்லாத தெய்வங்கள், இறந்து போன மனிதர்கள் எவரையும் ( அவர்கள் நல்லடியாராகட்டும், மகான்களாகட்டும், அவ்லியாக்களாகட்டும், ஏன் நபிமார்களாகட்டும் அழைப்பதும் பிரார்த்திப்பதும் கூடாது. நம்மில் சிலர் நிற்கும் போதும், அமரும் போதும் யா ரஸூலுல் , யா அவ்லியா, யா முஹ்யித்தீன், யாஷாஹுல் ஹமீது பாதுஷாவே,யா அஜ்மீர் காஜாவே, யா பீஅம்மா தாயே, யா செய்யிது அலி ஃபாத்திமாவே, யா ஏர்வாடி அவ்லியாவே என்றெல்லாம் அழைப்பதையும், பிரார்த்திப்பதையும் பரவலாகக் காணுகிறோம். இவையாவும் ‘’ஷிர்க’ என்னும் மிகப்பெரிய பாவங்கள் ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்:-
1.’ அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்! (அல்-குர்ஆன் 72:18) 2.’அல்லாஹ்வைத் தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்! (அல்-குர்ஆன் 10:106)
3. நீங்கள் (உங்கள் தேவைகளுக்காக) என்னையே அழையுங்கள். நான் உங்க(களுடைய பிரார்த்தனைக)ளுக்கு பதிலளிப்பேன். என்னை வணங்காது பெருமையடிப்போர் நிச்சயம் சிறுமையடைந்து நரகம்புகுவர்.(அல்-குர்ஆன் 40:60)

2. நேர்ச்சை செய்வதில் இணைவைத்தல்:

அல்லாஹுக்கு மட்டுமல்லாது பிற தெய்வங்களுக்காகவும், இறந்துபோன குடும்பத்தினருக்காகவும், அவ்லியாக்களுக்காகவும், ஊரிலுள்ள கப்ருகளுக்காகவும், மீலாதுந் நபி, முஹ்யித்தீன் விழா, நாகூர் கந்தூரி, அஜ்மீர் கந்தூரி, உரூஸ்கள் போன்றவற்றிற்காகவும் நேர்ச்சை நேர்வது கூடாது. ரமளான் பிறை 12ல் பாத்திமா நாயகிக்கும், ரமளான் பிறை 17ல் பத்று ஸஹாபாக்களுக்கும்,முஹர்ரம் மாதம் 10ல் ஆஷூரா நாள் அன்று ஹுஸைன் (ரலி) அவர்களுக்கும், ரஜப் பிறை 22ல் ஜஃபர் ஸாதிக் அவர்களுக்கும் ரொட்டி சுட்டு நேர்ச்சை செய்வது அல்லாஹ்வுக்கு ஷிர்க்கு-இணைவைக்கும் -செயல்களாகும்.

‘நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றவேண்டும்’ என்று வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இதோ :-

இவர்கள் (தங்களின் இறைவனுக்குச்செய்த) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய (இறுதி) நாளுக்கும் பயந்து கொண்டிருந்தனர். (அல்குர்ஆன்76:7)

இம்ரானுடைய மனைவி (மர்யமின் தாயார்)’ என் இறைவனே! நிச்சயமாக என் கருவிலுள்ள குழந்தையை முற்றிலும் உனக்கு அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆகவே, இந்த நேர்ச்சையை அங்கீகரிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். (அல்-குர்ஆன் 3:35)

3. அறுத்துப்பலியிடுவதில் இணைவைத்தல் :

அல்லாஹ் ஒருவனுக்கே (குர்பானி) அறுத்துப்பலியிடவேண்டும். வலிமார்களுக்கும்,ஷெய்கு மார்களுக்கும், இறந்து போன உற்றார் உறவினர்களுக்கும், மீலாது விழா,கந்தூரி விழாக்களுக்கும் ஆடு,மாடு, கோழிகளை அறுத்துப்பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு செய்யும் ஷிர்;க் ஆகும்.
‘உமது இறைவனைத் தொழுது (அவனுக்கே)அறுத்துப் பலியிடுவீராக!”(அல்-குர்ஆன் 108:2)

நபியே! நீர் கூறுவீராக. நிச்சயமாக என்னுடைய தொழுகை,தியாகம்,(குர்பானி) வாழ்வு,மரணம் யாவும் உலகைப்படைத்துக் காக்கும் அல்லாஹ்வுக்கே உரியவை.
(அல்-குர்ஆன் 6:162)
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள் :-

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப்பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! அறிவிப்பவர்:அலி (ரலி), நூல்: முஸ்லிம்

4. கீழ்படிவதில் இணைவைத்தல் :

அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமான மற்றொரு அதிகாரத்திற்கு கட்டுப்படுதலும் ஷிர்க் ஆகும்.

5. பற்று கொள்வதில் இணைவைத்தல் :

அல்லாஹ்விடம் மட்டும் காட்டவேண்டிய பற்றை, நம்பிக்கையை மற்றவர்களிடம் காட்டுவதும் ஷிர்க் ஆகும்.

6. சூனியம்,கைரேகை,ஜோசியம்,ஜாதகம்,குறி,பால்கிதாபு பார்ப்பதில் இணைவைத்தல் :

சூனியம் இறை நிராகரிப்புசசெயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் எந்த பயனையும் பெற்றுத்தராது தீமையை விளைவிக்கும் பாவச்செயலாகும்.

‘’அவர்களுக்கு எந்தப்பயனையும் தராத துன்பம் தரும் ஒன்றை -சூனியத்தைக்- கற்றுக்கொண்டார்கள். அல்குர்ஆன் 2:102

‘’சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெறமாட்டான். அல்-குர்ஆன் 20:69

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தர்ர்கள்:-
சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்புபவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்துவிட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

‘யாரேனும் குறிகாரனிடம் வந்து ஏதேனும் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம்.

7. கிளி ஜோஸியம்,பறவை சகுனம் பார்ப்பதும் இணைவைத்தலாகும்.

பறவைகள் போடும் சப்தத்தையும்,செயலையும் வைத்து நல்ல சகுகுனம்,அபசகுனம் பார்ப்பது, நல்லது கெட்டதை தீர்மானிப்பது அன்றைய அரபிகளின் வழக்கமாக இருந்தது.
கூண்டிலிரந்து பறவை வலது பக்கம் பறந்தால் நல்லது நடக்கும். வெற்றி ஏற்படும் எனவும், இடப்பக்கம் பறந்தால் தீமை ஏற்படும்,தோலவி ஏற்படும் என்நும் நம்பினார்கள். இன்றும் நம்மிடையே பறவைகளை வைத்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பதையும் பார்க்கிறோம்.

காக்கை கரைந்தால் விருந்தினா வருவர்.ஆந்தை சப்தமிட்டால் யாராவது மரணமடைவர்.பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுப்போகும் என்றெல்லாம் நம்புகின்றனர்.

பறவைகள் பறப்பதற்கும், சப்தமிடுவதற்கும் மனிதர்களின் வாழ்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக ‘ பறவை சகுனம் கிடையாது.’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). ஆதாரம் : புகாரி எண்கள்: 5753, 5754, 5755, 5756, 5757

மேலும் ‘ சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி)

8. நாள்,நட்சத்திரம், ராவு காலம் பார்ப்பதும் ஷிர்க் இணை வைத்தலாகும்.

இன்று இந்தக்கள் மார்கழி மாதத்தை பீடையாகக் கருதுவதைப் போல அன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக்கருதி அதில் எந்த லேலை செய்தாலும் பீடையே சூழும் என்றும் அரேபியர்களின் நம்பினர்.செவ்வாய் புதன் கிழமைகளைப் பீடையாகக் கருதினர்.

எனவே நாள், மாதத்திற்கு நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது என்பது நமது நம்பிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள்
” ஸஃபர் மாதம் பீடை என்பது கிடையாது” என்றார்கள் (அறிவிப்பவர்:அபூஹ~ரைரா (ரலி), நூல் : புகாரி)
காலத்தை குறை கூறுவதும் ஷிர்க் அகும்.இது கெட்ட காலம்!இது கெட்ட நேரம்! காலம் என்னை வஞ்சித்து விட்டது! இயற்கை சதி செய்த விட்டது! என்று மக்கள் குறைபடுவதைக் காணுகிறோம். காலத்தையும் நாளையும் எசுவது இறைலனை ஏசுவது போலாகும். நபி (ஸல்) அருளியதாக அபூ ஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான், ஆதமின் மகன் என்னை செய்கிறான்.அவன் காலத்தை திட்டுகிறான். நானெ காலத்தைப் படைத்தவன்.எனத கையில் தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே இரவு பகலை இயக்ககிறேன். (அதாரம்: புகாரி,முஸ்லிம்)

9.நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள் நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என நம்புவது குஃப்ரு இறை நிராகரிப்பாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-

‘அல்லாஹ்வின் கிருபையாலும் அருளாலும் மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார்.இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது எனக்கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ்களில் வெயியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவதும் ஷிர்க் ஆகும்.தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் ராசிபலன்கள் பற்றிய நிகழ்சிசிகள் இடம்பெறாத நாட்களே இல்லை.இவற்றைப்படிப்பதும்,பார்ப்பதும் பெரும் கற்றமாகும்.ஏனெனில் இவை ஷிர்கிற்கு வழி வகுத்துவிடும்.

10. தாயத்து தகடுகளில் பலன் இருப்பதாக நம்புவதும் இணைவைத்தலாகும்.

சூனியக்காரன், ஜோஸ்யக்காரனின் ஆலோசனைப்படி கழுத்தில்,கையில்,இடுப்பில், தாயத்துகளையும் வீடுகளில் கடைகளில் தகடுகளையும் நம்மில் பலர் தொங்க விடுகிறார்கள். இதனால் சோதனைகளிலிருந்தும் திருஷ்டிகளிலிருந்தும் பாதுகாப்புப்பெற முடியும் என நம்புகிறாாகள். இதைப்போன்றே செல்வம் பெருகவும்,வளவாழ்வு அமையவும் பலவடிவங்களில் ராசியான கற்களில் மோதிரங்களும் அணிந்து கொள்கின்றனர். இவையனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு எதிரான கொள்கைகளாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’ (அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்)

தாயத்து, தகடு, தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகிறவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மன்னிக்க முடியாத பெரும் பாவியாகிறான்.

புதுமனை,கட்டிடங்கள் கட்டும்போது அங்கே திருஷ்டிக் காப்பிற்காக பூசணிக்காய், கொலுக்கள், பொம்மை உருவங்கள் போன்றவற்றை தொங்கவிடுகிறார்கள்.இவையும் ஷிர்க் ஆகும்

11. அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தலும் இணைவைக்கும் பெரும் பாவமாகும்.

நபி(ஸல்) அவர்கள் 4றியுள்ளார்கள்:-

‘அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான்.’ (அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: அபூ தாவூது.)

கஃபத்துல்லாஹ், மஸ்ஜிதுந்நபவீ, இதரபள்ளிவாசல்கள், கப்ருகள்,அவ்லியாக்கள், பெற்றோர், பெரியார், குழந்தைகள் மீது சத்தியம் செய்வது அனைத்தும் அல்லாஹ் அல்லாதவற்றைச் சாரும். இவற்றுள் எதன் மீது சத்தியம் செய்தாலும் ஷிர்க் - இணைவைத்த பாவத்தைப் புரிந்ததாகும்.

12. கப்ருகளை வணங்குவதும் ஷிர்க் ஆகும்

இறந்துவிட்ட நபிமார்கள், அவ்லியாக்கள், பெரியார்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.துன்பங்களை போக்குவார்கள்.பிள்ளை வரம் தருவார்கள், பரிந்துரை செய்வார்கள்; என எண்ணி உதவி தேடுவது, பிரார்த்திப்து போன்ற செயல்கள் அனைத்தும் ஷிர்க் ஆகும்.
‘அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை அழைக்காதீர். அவ்வாறு அழைத்தால் நீர் வேதனை செய்யப்படுவோரில் ஆகிவிடுவீர்.’ (அல்-குர்ஆன் 26:213)

‘அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாகக் கருதி அதே நிலையில் மரணித்தவன் நிச்சயமாக நரகில் புகுந்துவிட்டான்.’ என நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் ் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)நூல் : புகாரி)

கப்ருகளை கட்டுவது, விளக்கேற்றுவது, பட்டுவிரிப்பது, பூமாலை போடுவது,விழா எடுப்பது ஆகிய அனைத்தும் ஷிர்க் மன்னிக்க முடியாத இணைவைத்தல் ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் ‘ கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும்.அவற்றை வணக்கஸ்தலமாக ஆக்குபவர்களையும், அங்கே விளக்கேற்பவாகளையும் சபிப்பானாக” என கடுமையாக எச்செரித்துள்ளார்கள்.

சிலர் கப்ரை வணங்குகிறார்கள். அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள சுவர்களையும், தூண்களையும் தொட்டுத்தடவி முத்தமிடுகிறார்கள். அதன் மண்ணை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள்.ஸஜ்தா செய்கிறார்கள்.பணிவுடன் நின்று மரியாதை செய்கிறார்கள். மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். ஹஜ்ஜிற்கு வரும் ஹாஜைிகளில் சிலர் மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பகீஹ் அடக்கஸ்தலத்திலள்ள மண்ணையும்,கற்களையும் பரக்கத்திற்காக சுமந்து வருகிறார்கள்.இவையெல்லாம் அல்லாஹ்வுக்கெதிராகச் செய்யும் இணைவைக்கும் பாவச்செயலகளாகும்.

13. அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவதும், ஆகுமாக்கியதை விலக்கிக்கொள்வதும் ஷிர்க் ஆகும்.

அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது, அல்லாஹ்வைத்தவிர பிறருக்கும் அவனது செயலில் பங்கு உண்டு என நம்புவது, ஷரீஅத்தின் தீர்ப்பை விட்டுவிட்டு ஏனையத்தீர்ப்புகளை சரியெனக்கொள்வது இவையனைத்தும் சமுதாயத்தில் பரவி நிற்கும்’ஷிர்”கான காரியங்களாகும்.

14. இவையனைத்தும், “ஷிர்க்” என்பதற்குரிய அதாரம் என்ன?

இவையனைத்தும், ‘’ஷிர்க் என்பதற்கு பின்வரும் இறை வசனம் சான்றாகும்.

‘இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும்,மதகுருமார்களையும் , மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டி ருக்கின்றனர்’. (அல்குர்ஆன்-9:31)
அதீ இப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டிய போது, ‘ கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும் வணங்கவில்லையே!’ என்று நான் கேட்டேன்.அதற்கு நபி(ஸல்) ‘ஆம்!’ எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்கி றார்கள். எனவே இதுதான் கிறித்தவர்கள் ‘தங்களின் பாதிரிகளுக்கும் துறவி களுக்கும் செய்யும் ‘இபாதத்’ வணக்கமாகும்” என்றும் கூறினார்கள்.’ (திர்மிதி)

15. சிறிய ‘’ஷிர்க்’ என்றால் என்ன ?

அல்லாஹ்வை திருப்திபடுத்தவேண்டுமென்ற நோக்கமில்லாது பிறர் புகழ்வேண்டும், பாராட்டவேண்டும்,மதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் வணக்க வழிபாடுகளுக்கு ‘ரியா’ (முகஸ்துதி) சிறிய இணை வைத்தல் என்று பெயராகும்.

16. மறைவான இணைவைத்தல் என்றால் என்ன?

மறைவான வெளியே தெரியாத இணைவைத்தல் என்பது அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகள் மீது திருப்தி கொள்ளாது அலட்சியம் காட்டுவதாகும்.

இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாகும்.
‘இருள் நிறைந்த இரவில் கறுப்புப் பாறை ஒன்றின் மீது ஊர்ந்து செல்லும் கறுப்பு நிற எறும்பு வரிசையின் நிலையைக் காட்டிலும் இந்தமறைவான ஷிர்க்- -இணைவைத்தல்- இந்த சமுதாயத்தில் மறைந்துள்ளது.’ என நபி(ஸல்) கூறினார்கள். (உடனே) நபித்தோழர்கள் இவ்வித மறைவான இணைவைத்தலிலிருந்து எவ்வாறு (நம்மை) காப்பது எனக் கேட்டபோது, பின்வரும் துஆவை நபி(ஸல்), அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க அன் உஷ்ரிக்க பிக்க ஷைஅன் வஅன அஃலமு வஸ்தஃபிருக்க லிமாலா அஃலமு’

‘இறைவா! நான் அறிந்த நிலையில் உனக்கு ஏதேனும் வகையில் இணை கற்பித்திருந்தால் அதைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். நான் அறியாமற் செய்தவற்றிற்காக உன்னிடம் பிழை பொறுக்கத் தேடுகிறேன்.’

‘குஃப்ர்’

17. ‘குஃப்ரு’ இறை நிராகரிப்பின் வகைகள் எத்தனை ? அவை யாவை ?

இரண்டு வகைப்படும். அவை :

1. பெரிய அளவு நிராகரிப்பு : இது மக்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்.
2. சிறிய அளவு நிராகரிப்பு : இது மக்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடாது. இது இறைவனுக்குச் செய்யும் நன்றிகெட்ட துரோகமாகும்.

18. பெரிய நிலை நிராகரிப்பின் வகைகள் எத்தனை அவை யாவை ?

ஐந்து வகைப்படும். அவை :
1. இறைவனை ஏற்க மறுத்தல்
2. சத்தியத்தை ஏற்பதில் காட்டும் வீம்புத்தனம்.
3. வீண் சந்தேகம் கொள்ளுதல்.
4. உண்மையை அறிந்து கொள்வதில் அலட்சியம் காட்டுதல்.
5. நயவஞ்சகம் காட்டுதுல் (இரட்டை வேடமிடுதல்)

19. நயவஞ்சகத்தின் வகைகள் யாவை ?

அவை இரண்டாகும்.
1. நம்பிக்கை கொள்வதில் காட்டும் நயவஞ்சகம். (உள்ளத்தில்)
2. செயல்களில் வெளிப்படும் நயவஞ்சகம்.

20. நம்பிக்கை கொள்வதில் காட்டும் நயவஞ்சகத்தின் பிரிவுகள் யாவை ?

1. இறை தூதரை ஏற்க மறுத்தல்.
2. இறை தூதர் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தல்
3. இறை தூதரை நேசிக்காமல் வெறுத்தல்.
4. இறை தூதர் கொண்டுவந்ததை நேசிக்காமல் வெறுத்தல்
5. இஸ்லாம் மாற்றாரால் அவமதிக்கப்படுவதை பார்த்து மகிழ்ச்சியடைதல்.
6. இஸ்லாம் பரவுவதை விரும்பாதிருத்தல்.

21. செயல்களில் வெளிப்படும் நயவஞ்சகத்தின் பிரிவுகள் யாவை?

1. பேசினால் பொய்யே பேசுதல்.
2. வாக்குறுதி அளித்தால் அதை மீறுதல்.
3. நம்பினால் மோசம் செய்தல்.
4. உடன்படிக்கை செய்தால் துரோகம் செய்தல்.
5. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எதிரியாக நடத்தல்.

22; இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் நற்செயல்கள் இறைவனால் ஏற்கப்படுமா ?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல் ஆனாலும் இறைவனால் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது. கீழ் காணும் இரண்டு இறைவசனங்கள் அதற்கு சான்றுகளாhகும்.

‘அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டும் அழிந்துவிடும். (அல்-குர்ஆன்-6:88)

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இறைவனுக்கு இணைவைப்பவன் வெகு தூரமான வழிகேட்டில் இருக்கிறான். (அல்-குர்ஆன்-4:116)

23. இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள் யாவை ?

பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :-

1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்).
2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல்.
3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல்.
4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல்.
5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல்.
6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல்.
7. சூனியம் செய்தல்.
8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.
9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல்.
10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல்.

24. முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படைகள் யாவை?

1. இவ்வுலகைப் படைத்துக் காத்து நிர்வகிப்பவனும், உலக இயக்கங்கள் அனைத்துக்கும் முழுக்காரணமாக விளங்கும் நமது இரட்சகனை பற்றி அறிந்து கொள்ளுதல்.
2. நமது இஸ்லாமிய மார்க்கத்தப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல்.
3. முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல்.

25. ‘தாகூத்’ என்றால் என்ன ?
அல்லாஹ்வைத்தவிர வணக்கப்படுபவைகள், பின்பற்றப்படுபவைகள் அனைத்தும் ‘தாகூத்’ ஆகும்.

26. மொத்தம் எத்தனை தாகூத்கள் உள்ளன? அவைகளின் தலைவர்கள் யாவர்?
ஐந்து பேர். அவர்கள் :-

1. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஷைத்தான்.
2. தன்னை மற்றவர்கள் வணங்க அனுமதிப்பவர்.
3. அல்லாஹ்வுக்கு பதிலாக தன்னை அனைவரும் வணங்க வேண்டுமென மக்களை அழைப்பவன்.
4. மறைவானவற்றை அறியும் ஆற்றல் தனக்கிருப்பதாக வாதிப்பவன்.
5. அல்லாஹ்வின் சட்டங்களை வீசிஎறிந்து விட்டு ஏனைய சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்பவன்.

‘அல்லாஹ்’

27. உன்னைப்படைத்துக் காக்கும் இரட்சகன் யார் ?

என்னைப் படைத்துக் காக்கும் இரட்சகன் அல்லாஹ் ஒருவனேயாவான். அவன் தான் என்னையும் உலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தவன். அவன் தான் எனக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தனது அளவற்ற அருட்பெரும் கொடையினால் உணவளிக்கிறான்.

28. உனது மார்க்கம் எது ?

என்னுடைய மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், அவனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கும் தன்னை முழுமையாக ஒப்படைப்பதும் அதற்கு முழுமையாக கீழ்படிதலும் ஆகும். இதனை மிக்கப் பற்றுதலுடனும் நம்பிக்கையுடனும் (ஆதரவு வைத்தும்) இறையச்சத்துடனும் பேணிச்செய்தல் வேண்டும்.

29. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய் ?

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் அவனது படைப்புகளான இரவு பகல், சூரியன் சந்திரன், வானம் பூமியைக்கொண்டும், அவைகளிலுள்ள ஏனையப் படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன். (ஆதாரம் : குர்ஆன் வசனம் 37:41, 57:7)

30. அல்லாஹ் எங்கிருக்கிறான் ?

அல்லாஹ் வானங்கள் அனைத்திற்கும் மேலாக ‘அர்ஷ்” எனப்படும் தனது அரியாசனத்தின் மீது இருக்கிறான்”.
அல்லாஹ் கூறுகிறான் : அர்ரஹ்மான் தனது மகத்துவத்திற்கும் மாண்புக்கும் தகுந்தவாறு அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான். (அல்-குர்ஆன் 20:5)

31. அல்லாஹ் நம்முடன் எங்கும் இருக்கிறானா ?

அல்லாஹ் தனது மேன்மைக்குரிய அரியாசனத்தின் மீது அமைந்துள்ளான். அஞ்சவேண்டாம்! நிச்சயமாக நான் யாவற்றையும செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறேன். (அல்-குர்ஆன் 20:46) என்று அல்லாஹ் கூறுவது போல, அவனுடைய தனிப்பெரும் ஞானத்தினால் நாம் செய்பவை யாவற்றையும் உற்று நோக்குபவனாகவும் நாம் பேசுபவை யாவற்றையும் செவியேற்பவனாகவும், அர்ஷின் மீது இருந்து கொண்டே நம்மைக் கண்காணித்து வருகிறான்.

32. அல்லாஹ்வின் நேசர்கள் (அவ்லியாக்கள்) யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் என்ப்படுவோர் ‘அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள். நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனை அதிகம் அஞ்சி வாழ்வார்கள். எல்லாவகையான பாவங்களைவிட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். நற்செயல்கள் அனைத்தையும் செய்து வருவார்கள். திருமறை குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் பேணிக் கடைபிடித்து வாழ்ந்து வருவார்கள்.

33. அல்லாஹ்வை நீ எவ்வாறு வழிபடுகின்றாய் ?

என்னுடைய எல்லா வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே உரிய வகையில் சமர்பித்து அவனை ஒருமுகப்படுத்தி உள்ளச்சத்தோடு வழிபடுகிறேன். எனது வணக்க வழிபாடுகளில் நான் எவரையும் சேர்ப்பதில்லை.’இபாதத் ” என்பது சொல் செயல் யாவும் அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் உள்ளச்சத்தோடும் மனத்தூய்மையோடும் ஆற்றப்படும் ஒரு வணக்கமாகும் என்பதை உணர்ந்து செயலாற்றுகிறேன்.

34. அல்லாஹ் தன் தூதர்களை எதற்காக அனுப்பினான் ?

அல்லாஹ்வுடன் யாரையும் துணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கி வரும்படி மக்களை அழைப்பதற்காகவும், மனித இனம் ‘எங்களுக்கு நேர்வழி காட்ட எவரும் வரவில்லை’ என இறைவனுக்கெதிராக முறையிடாதிருப்பதற்காகவும் தூதர்களை அனுப்பினான்.

‘இஸ்லாம்’ , ‘ஈமான்’

35. ‘இஸ்லாம்’ என்பதன் பொருள் என்ன ?

‘சாந்தி,சமாதானம்,அடிபணிதல்’ என்பது சொற்பொருளாகும்.எனினும் மார்க்கத்தில் ‘தவ்ஹீத்’ என்னும் ஏகத்துவத்துடன் அல்லாஹ்விடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுதல்’ என்ற பொருளுக்கே சொல்லப்படுகிறது.

36. இஸ்லாத்தின் தூண்கள் எத்தனை ? அவை யாவை ?

அவை ஐந்தாகும்
1. ஈமானுக்கு சான்று பகர்தல் ( வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் மனதால் நம்பி வாயால் மொழிவதாகும்)
2. தொழுகையை நிலை நாட்டுதல்.
3. ஸக்காத்தை வழங்குதல்.
4. ரமளான் மதம் முழுவதும் நோன்பு நோற்றல்.
5. பயணம் செய்ய வசதிபெற்றோர் ஆயுளில் ஒருமுறை ஹஜ்ஜு செய்தல்.

37. ‘ ஈமான்’; என்றால் என்ன ?

ஈமான் என்பது , மனதில் நம்பிக்கை கொண்டு , அதை நாவால் மொழிந்து, உடல் உறுப்புகளால் செயல்படுத்துவதேயாகும்.

38. ஈமான் நம்பிக்கையில் கூடுதல் குறைவு ஏற்பட முடியுமா ?

ஆம்! நாம் பேசும் வார்த்தைகளாலும் செய்யும் செயல்களாலும் கூடவோ குறையவோ செய்யலாம்.

39. ஈமானில்; கூடுதல் குறைவு என்பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வின் ஆணைகளுக்கு அடிபணிந்து நல்லறங்கள் செய்வதால் ஈமான் கூடுகிறது. பாவங்கள், தீமைகள் செய்வதால் அது குறைகிறது.

40. ஈமானின் தூண்கள் எத்தனை ? அவை யாவை ?

ஆறாகும். அவை கீழ்காணும் விசயங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வதாகும்.

1. அல்லாஹ் மீதும்,
2. அவனது வானவர்கள் மீதும்,
3. அவனது தூதர்கள் மிதும்,
4. அவனது வேதங்கள் மீதும்,
5. இறுதிநாள் மீதும்,
6. விதியின் மீதும் (நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என நம்பிக்கை கொள்வதாகும்.

41. அல்லாஹ்வின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது ?

அவன் ஒருவனே! ஆதியும் அந்தமும் இல்லாதவன். மனைவி மக்கள் அவனுக்கில்லை. ஊண் உறக்கம் மறதியற்றவன். அவன் தேவைகள் அற்றவன். உலகிலுள்ள அனைத்தும் அவன் பால் தேவை உடையன. அவன் யாருக்கும் எந்த வகையிலும் ஒப்புவமையற்றவன்.
அகில உலகையும் பிறர் துணையின்றியே படைத்துக் காத்து ஒழுங்குற நிர்வகிப்பவன். இவ்வுலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அவன் நாட்டப்படியே நிகழ்கின்றன. அவன் மட்டுமே வணங்கி வழிபடத்தக்கவன். அவனுக்கு அழகிய பல திருநாமங்களும், தனித்தன்மைகளும் உயரியபண்புகளும் உள்ளன என்றும் நம்பவேண்டும்.

42. மலக்குகள் -வானவர்கள்- என்றால் யார் ?

மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

43. இறை வேதங்கள், இறைதூதர்கள் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது ?

அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவனை மட்டுமே வணங்கி வரவேண்டுமென மக்களை அழைப்பதற்காக ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா(அலை), ஈஸா (அலை) போன்ற பல இறை தூதர்களை அல்லாஹ் உலகிற்கு அனுப்பி வைத்தான். மக்களுக்கு வழி காட்ட வேதங்களும், ஆகமங்களும் (ஸுஹ்ஃபுகள்) அவ்வப்போது அருளப்பட்டன.

அவற்றுள் தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகியவை முக்கியமானவ ஆகும். இவை முறையே மூஸா(அலை), தாவூது (அலை),ஈஸா(அலை), முஹம்மது (ஸல்) ஆகியோருக்கு வழங்ப்பட்டன. குர்ஆன் வேதம் இறுதி வேதமாகும். இதற்குப்பிறகு வேதங்கள் அருளப்படவே இல்லை. ஆதம், இப்றாஹீம், மூஸா போன்ற இறை தூதர்களுக்கு ஆகமங்கள் (வேதச்சட்டங்கள்) வழங்கப்பட்டிருக்கின்றன.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு முஹம்மது நபி (ஸல) வரை இலட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட, வல்ல இறைவன் அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளான். அவர்களில் 25 நபிமார்களின் பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இறைதூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே கிடையாது. ‘நாம் ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் இறை தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம்’. என இறைமறை அல்-குர்ஆன் (16:36) கூறுகிறது. எனவே, இறுதி வேதமான குர்ஆனையும், இறுதித்தூதரான முஹம்மது (ஸல்) அவர்களையும் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வணக்கவழிபாடுகளையும் செய்து வரவேண்டும்.

44. இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வதன் பொருள் என்ன?

இந்த உலகிற்கும் உலகிலுள்ள அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். அந்த தவணை வரும்போது அனைத்தும் அழிந்து விடும். பின்னர் இறந்தவர் யாவரையும் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து அவரவர் நன்மை தீமைகளுக்கேற்ப நீதி வழங்குவான். நன்மை செய்தோருக்கு சுவாக்கமும், பாவம் செய்தோருக்கு நரகமும் கூலியாக வழங்கப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளை நம்புவதற்கே ‘ கியாமத்து நாள்’ இறுதி நாள் எனப்படும்.

45. ‘விதி’ (தக்தீர்) என்பதன் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வது?

அல்லாஹ் விதித்தபடியே உலகில் அனைத்து நன்மைகளும் தீமைகளும் நிகழ்கின்றன என்று உறுதியாக நம்புவது தான் விதியின் மீது நம்பிக்கை கொள்வதாகும். அவன்தான் அனைத்தையும், ‘தான் தீர்மானித்தவாறே’படைத்துள்ளான் என நம்புவதும் விதியைச் சார்ந்ததாகும்.

‘இஹ்ஸான்’

46. இஹ்ஸான் என்பதன் பொருள் என்ன ?

‘ நீ அல்லாஹ்வை பார்ப்பது போல் வணங்குவதாகும். அவ்வாறில்லையெனில் ‘அல்லாஹ் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்’ என்ற எண்ணத்தில் உன் வணக்க வழிபாடுகளைச் செய்வதாகும். இந்நிலைக்கே ‘இஹ்ஸான்’ எனப்படும்.

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’

47. ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திறகுரியோன் அல்லாஹவைத்தவிர வேறு யாருமில்லை’ என்பதன் பொருள் என்ன ?

இந்தச் சொற்றொடரின் பொருள் பின் வரும் இரு விசயங்களை உள்ளடக்கியதாகும்.

1. லாயிலாஹ : அல்லாஹ் அன்றி வணங்கப்படும் அனைத்தையும் நிராகரிப்பதாகும்.
2. இல்லல்லாஹ் : வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவனுக்கு மட்டுமே உரித்தாக்குவதாகும்.

‘லாயிலாஹ’ என்ற சொல்லில் மறுத்து விடுதல். ‘இல்லல்லாஹ்’ என்ற சொல்லில் உறுதிப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களும் அடங்கியுள்ளன.

‘முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’

48.’முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ (முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர்) என்பதன் பொருள் என்ன?

நபி(ஸல்) கட்டளையிட்டவைகள் யாவற்றையும் முழுமையாக ஏற்றுப்பின்பற்றுவதும், தடுத்தவைகள் யாவற்றையும் முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் அறிவித்தவைகள் யாவற்றையும் அப்படியே நம்புவதும் ஆகும்.

49. ஈமானை மெய்ப்பிப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?

ஏழாகும். அவையாவன :
1. அறியாமையை அகற்றி நல்லறிவு பெறுதல்
2. சந்தேகங்களை நீக்கி உறுதிப்பாட்டை மேற்கொள்ளுதல்.
3. ஷிர்க் -இணைவைத்தலை-ஒதுக்கிவிட்டு நேர்மையான தூய நோக்கம் கொள்ளல்.
4. நயவஞ்சகத்தை அகற்றி உண்மை நிலையை அடைதல்.
5. அல்லாஹ்வின் மார்க்கத்தை அலட்சியம் செய்யாது அன்பும் ஈடுபாடும் கொள்ளுதல்.
6. கீழ்படியாமையை விட்டுவிட்டு கீழ்படியும் பக்குவத்தை பெறுதல்.
7. இறை நிராகரிப்புகளை வெறுத்து ஒதுக்கி விட்டு இறைநியதிகளை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளல்.

50. எந்த அடிப்படையைப் பின்னற்றி வாழ்வதில் அல்லாஹ் மிகவும் கண்டிப்புக் காட்டுகிறான். ?
‘ தவ்ஹீத் என்னும் ஏகத்துவக்கொள்கையை பின்பற்றி வாழ்வதில் தான் அல்லாஹ் மிகவும் கண்டிப்புக்காட்டுகிறான்.

(இந்த ஐம்பது விசயங்களையும் ஒரு முஸ்லிம் கண்டிப்பாக அறிந்து கொள்வதுடன் உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் உண்மை முஸ்லிமாக விளங்க முடியும். இவற்றை நமது குழந்தைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைத்து மக்களுக்கும் நாம் போதித்து உண்மை இஸ்லாத்தை புரிய வைக்க வேண்டும். வல்ல இறைவன் அதற்கான நற்கூலியை வழங்குவானாக.)
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16