ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதை, ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.
விதி பற்றிய இந்துமதக் கோட்பாடு
இரு மனிதர்களின் பிறப்பில் உள்ள பாகுபாடு இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொன்று அங்கஹீனமாகவும், ஒரு குழந்தை ஒரு பெரிய பணக்காரன் வீட்டிலும் மற்றொன்று ஒரு வக்கற்ற ஏழை வீட்டிலும் பிற்க்கிறது. இவ்வாறு அவை ஏற்றத்தாழ்வுடன் பிறப்பதற்கு காரணம் அவைகளின் (கர்மங்களின்) அடிப்படையிலேயே இப்பிறவியில் பாகுபாடு உள்ளது, என்பது இந்துமத சித்தாந்தம். ஆனால் மறு பிறவி என்பதற்கு எந்த ஆதாரப் பூர்வமான மதசம்மந்தமான தெளிவுகளும் இல்லை.
இஸ்லாம் கூறும் நல்ல தீய செயல்கள்(அமல்கள்) குறித்து அருள்மறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)
இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களம் என்பதை தெளிவு படுத்துகிறது.
நம்மை எப்படியெல்லாம் சோதிக்கிறான் என்பதற்கு சில ஆதாரங்களை கீழ் கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன.'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) -(2:214)
''நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?-(29:2)
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (21:35)