இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்
இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.
முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.
2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.
அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.
ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.
”கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.
மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது .
2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.
4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.
மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன – முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.
அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS. 68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.
இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.
நன்றி- கீற்று-பிரபாகரன் -மொழியாக்கம்
(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16