வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்


இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்



மு. அப்துல் சமது, தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி



1929 – ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*



ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை – என்ற கோசத்தை

வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,  P.426.)



1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்.



மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.



பூரண சுயராஜ்யம் (Complete Indepedence Nation) தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேர்ப்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.*

(* Young India, May 4 , 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothers, PP.159-

60, 164-65.)



ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 - இல் கிலாபத் கமிட்டித் தலைவராகவும், 1924 - இல் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டுத் தலைவராகவும் இருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1921 அஹமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் தான் எழுப்பிய பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்



மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள், தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.



ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.



ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.



''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.



ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாரிசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சிறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது !*

செக்கிழுத்த செம்மல் ஹஜ்ரத் மொஹானி என்று இனியாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும். (*சிராஜுல் மில்லத் அ.க. அப்துஸ் ஸமது, இஸ்லாமிய தமிழர் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா உரையில், சென்னை. 18.10.1997)



பத்வா




தென்னகத்தில் இயங்கி வந்த அரபிக் கல்லூரிகளும் மதரசாக்களும் அன்று தேச விடுதலைப் போராட்டக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இந்நிறுவனங்களில் பணியாற்றிய உலமாக்கள் ஆங்கில அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 1831 மே 6 - இல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.

தேச விடுதலைப் போராட்டம் மார்க்க அமல் (வழிபாடு) தொடர்பானது – என்ற தேசாபிமான முழக்கங்களுடன் ஆங்கிலேயருக்கு எதிராக எழுதியும் பேசியும் தங்கள் சுதந்திரப் பங்களிப்பைத் தந்த தேவ்பந்த் உலமாக்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர் மீதுள்ள வெறுப்பினை அவர்களது மொழியின் மீதும் காட்டினர். ஆங்கிலம் படிப்பது ஹராம் - என்று தேவ்பந்த் உலமாக்கள் பத்வா(மார்க்கத்தீர்ப்பு) கொடுத்தனர்.



அந்நியப் பொருட்களைப் பரிஷ்கரிக்க வேண்டும் சுதேசிப் பொருட்களையே வயங்கவேண்டும் என்ற காந்திஜியின் சுதேசி இயக்கம் நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கலாச்சார இயக்கமாக உருவாகியது. இதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.




முஸ்லிம்கள் பிரிட்டீஷாரின் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் (Haram ; Unlawful).

-1921 ஜுலையில் கராட்சியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டின் தலைமை உரையில் மௌலானா முகம்மது அலி.*



சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்,** கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது – என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.



1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றிய உலமாக்களின் சுதந்திர பங்கேற்பு மகத்தானது.



(* Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.)

(** சிராஜுல் மில்லத் அ.க.அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களது தந்தையார்.)



3. விடுதலைப்போரில் வீரமங்கையர்



ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61)



பேகம் ஹஜ்ரத் மஹல்



1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.



பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.



ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.



... குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.*



1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.



பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.**



பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 – வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்.***



(*மேற்படி.,பக்கம்.253.) - (** மேற்படி,.பக்கம்.354-355) - (*** R.c. AgarWal, Constitution Develapment of India and National Movement, P.43,53)



1858 மார்ச் 6 – ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.



பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.


போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை


பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*



1938 - இல் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.



அப்பேட்டியில்:

என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.



அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன – என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.



சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.



இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். (* B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History, P.268.). - (** தினமணி, 29.04.1938., மறுபிரசுரம்: 29.04.1977.)



தொடரும்...
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16