மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, ''கரு''வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது,அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) ''இயற்கையே கடவுள்'' என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
''பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது'' என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் ''அமீபா'' என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?)நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். ''அமீபா''விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று,மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் ''இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன'' என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் ''மூல''சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்:பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ்,கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும், குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.'' (அல் குர்ஆன் 6: 2)
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
''இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல் குர்ஆன் 30: 20)
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது ''தீன்'' (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், ''துராப்'' (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
''தீன்'' என்ற வார்த்தையும், ''துராப்'' என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும். மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் ''தீன்'' என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ''துராப்'' என்ற வார்த்தை மட்டும் போதுமானது.அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.அந்த வசனத்தில் ''மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்'' என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம்,செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம்.அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான''மூல''த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்)மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7
இந்த வசனத்தில் ''மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்'' என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து,அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.
إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
''ஹமஉ'' என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். ''மஸ்னூன்'' என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்)மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
''ஸல்ஸால்'' என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் ''ஸல், ஸல்'' என ஓசை தரும் என்பதால் அதற்கு ''ஸல்ஸால்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ''ஸல்ஸால்'' என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. ''குன்''என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்''ஆகுக!'' எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும். அல் குர்ஆன்: 36: 82
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண்,தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.