[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]
உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.
இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.
கணவனை இழந்து மறுமணம் செய்ய முடியாமல் இல்லறத்திற்காக ஏங்கி நிற்கும் மனவேதனை ஒருபுறம், சமூகத்தவர்களால் தனக்கு ஏற்படும் அவமானம் மற்றொரு புறம். இதனால் சிலர் வாழ்நாள் முழுவதும் தான் வாழத்தான் வேண்டுமா? என தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலை. இன்னும் சிலரோ ‘இருப்பதைவிட இறப்பதே மேல்’ என தானாகவே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். மற்றும் சிலரோ மறுமணம் செய்ய முடியாததால் இல்லறத்தை நோக்கி அலைபாயும் எண்ணங்களைத் தணித்துக்கொள்ள தவறான வழியில் வாழ்வைத்தேடி புதைகுழியில் விழுகின்றனர்.
இத்தனை இழிநிலைகளும் கணவன் இறந்தபின் வாழாவெட்டியாக உயிர் வாழ்வதால்தானே ஏற்படுகிறது! எனவே இதற்கெல்லாம் வழிகொடுக்காமல் கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை என்ற பெயரால், அவளையும் சாகடிக்கும் கொடுமையை இன்றும் அவ்வப்போது வடநாட்டின் சில இடங்களில் காணத்தானே செய்கிறோம். பெண்களின் வாழ்வுரிமையை திட்டமிட்டல்லவா பறிக்கிறது இக்கொடிய பழக்க வழக்கங்கள்!
ஆணும் பெண்ணும் ஒருமனதாக திருமணம் செய்து இல்லறத்தின் இன்ப துன்பங்களில் சமமாக பங்கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது கணவன் இறந்தால் மட்டும் பெண்ணாகிறவள் உடன்கட்டை ஏறவேண்டும். இதே மரணம் மனைவிக்கு முன்னதாக ஏற்பட்டால் எந்த கணவனாவது உடன்கட்டை ஏறியதாக எங்காவது கேள்வி பட்டிருக்கோமா? அவன் ஏன் மனைவியுடன் உடன்கட்டை ஏறப்போகிறான். மனைவி இறந்தவுடன் புதுமாப்பிள்ளை எனும் அங்கீகாரம்தான் அவனுக்குக் கொடுக்கப்படுகிறதே! பெண்ணினம் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறென்ன வேண்டும்?
கணவனை இழந்ததை தன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய இழப்பாகக் கருதி மற்றொரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு பெண்ணுக்கு கவுரவமா? அல்லது கொடுமைக்கார மனிதர்களுக்கு அஞ்சி கேழைத்தனமாக உயிரைக் கொடுப்பது கவுரவமா? இவை அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டும்.
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கொடுமைகளுக்குச் சாவுமணி அடித்தது. ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.
இதுபற்றி அல்லாஹ் திருமறையில், ‘இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணையில்லா (ஆடவர் பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்ஸ’ (அல்குர்ஆன் 24:32)
மேலும் திருமறையின் 2 ஆவது அத்தியாயத்தின் 234 ஆவது வசனத்தில், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும். இந்த தவணை பூர்த்தியானதும் (தங்கள் நாட்டத்திற்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் முறைப்படி எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவனாக இருக்கின்றான்.’ என்று அல்லாஹ் அனுமதியளிக்கின்றான்.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையும் (கர்ப்பத்தை அறியும் மூன்று மாத) தவணைக்காலம் முடிந்ததும் மறுமணம் செய்துக் கொள்வதை தடுக்கக்கூடாது என்று அல்லாஹ் திருமறையின் 2:23 ஆவது வசனத்தில் எச்சரிக்கையும் செய்கின்றான். இத்திருமறையின் வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் வாழ்வுரிமையை நிலைபெறச்செய்ய மறுமணத்தை செய்து கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். இதனை வழிகாட்டியாக ஏற்ற உத்தம நபித்தோழர்களும் இப்புரட்சியைச் செய்துள்ளார்கள்.
பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர். அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.
‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது. ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.
இந்நிலையில் துணையில்லாமல் வாழ்வது, அதுவும் காணும் இடமெல்லாம் இச்சையைத்தூண்டும் அத்தனை வாசல்களும் திறந்துவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில் துணை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்வது கடமை என்றே கூட சொல்லலாம். காரனம் அது அவர்களது கற்புக்கு பாதுகப்பாக அமையுமல்லவா?
இனிமேலும் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்தும் ஆணினத்தைப் போன்று பெண்ணும் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவள்தான். ஆண்களைப் போன்ற உணர்வகளும், வாழும் ஆசைகளும் அவளுக்கும் உண்டு என உணர்த்த வேண்டும்.
விதவைப் பெண்களை இழிவுபடுத்துபவர்களைச் சட்டம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அவர்கள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்திட உரிமை கொடுக்க வேண்டும். மேலும் உலகிலுள்ள அனைவரும் பெண்களின் உரிமைகளைப் பேணும் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வெண்டும்.
தன்னால் விவாகரத்துச் செய்யப்பட்டு முடிந்து போன அதே பெண்ணை மீண்டும் (மறுமணம்) மணந்து கொள்ள பழைய கணவனே விரும்பினால்...
தன்னால் விவாகரத்துச் செய்யப்பட்டு முடிந்து போன அதே பெண்ணை மீண்டும் மணந்து கொள்ள பழைய கணவனே விரும்பலாம். நன்றாக சிந்தித்து, பொறுமையுடன் பிரச்சனைகளை அணுகாமல் அவசரப்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்து விடுவதால் இது போன்ற நெருக்கடி ஏற்படுவதுண்டு. இச்சமயத்தில் உடனடியாக அப்பெண்ணை அவன் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஐந்து நிபந்தனைகளை அவள் பூர்த்தி செய்த பிறகே, அவன் விவாகரத்துச் செய்த அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய முடியும்.
அனைத்து வகை விதவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இத்தா (திருமணத்துக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருத்தல்)என்றும் எதிர்பார்த்தலை அந்த முதல் மனைவி மேற்கொள்ள வேண்டும்.
இத்தா காலம் முடிந்தபின் அப்பெண் வேறொரு ஆணை மணந்து கொள்ள வேண்டும்.
o அந்தக் கணவனுடன் தாம்பத்திய உறவு ஏற்பட வேண்டும்.
o பின்னர் அந்த இரண்டாவது கணவன் அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும்.
o மறுபடியும் அவள் இத்தா இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை முறையாக செய்து முடித்து பிறகே மறுமணம் நடைபெற முடியும். முதலில் இழந்த பெண்ணை அவன் மீண்டும் மனைவியாக்க முடியும். இந்த நெருக்கடி வந்து விடக்கூடாது என்பதற்காகவே, விவாகரத்து விடயத்தில் அவசரம் கூடாது என்றும், கணவன், மனைவி இடையே பொறுமை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, எல்லாவற்றையும் விட இறையச்சம் அவசியம் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மணைவி இத்தா இருக்கிறாள் அதே மணைவி இறந்தால் மட்டும் கணவன் இத்தா இருப்பதில்லையே ஏன்?
இஸ்லாம் மார்க்கத்தில் மணைவி இறந்து விட்டால் அடுத்த நாளே கணவன் மறுமணம் செய்து கொள்கிறான்.அது போன்ற சட்டம் பெண்ணிற்கு இல்ல்லையே ஏன்?
ஒரு ஆண் தன் மனைவியை இழந்துவிட்டால் உடனேயே அவன் இன்னொரு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் அவள் அடுத்த நாளே மறுமணம் செய்ய முடியாது. சில நாட்கள் திருமணத்தை ஒத்திப் போட வேண்டும். மறுமணத்தை ஒத்திப்போடும் காலமே இத்தா எனப்படுகின்றது.
எவ்வளவு காலம் திருமணத்தை ஒத்திப்போட வேண்டும் என்பது பல விதங்களில் வித்தியாசப்படும்.
''கர்ப்பிணிகள் (மறுமணத்திற்காக) காத்திருக்கும் காலம் அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்''. (அல்குர்ஆன் 65:4)
கணவனை இழக்கும்போது அவள் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் எட்டு மாதங்கள்) அவற் மறுமணம் செய்யலாகாது. கணவனை இழக்கும் போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் ஏழெட்டு நாட்கள்) அவள் மறுமணம் செய்யலாகாது.
கணவனை இழக்கும் சமயத்தில் அவள் கர்ப்பிணியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருந்தால் அவள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டம் முடியும் போது அவள் கர்ப்பிணியாக இல்லை என்று உறுதியானால் உடனே அவள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்தக் காலகட்டம் முடிவுறும் போது அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தால் அவள் பிரசவிக்கும் வரை மீண்டும் திருமணத்தை தாமதப்படுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் யாவும் 65:4 வசனத்தையும் 2:234 வசனத்தையும் ஆராய்ந்தால் விளங்கும்.
இந்தக் காலகட்டம் பெண்ணுக்கு வித்தியாசப்படுவதைக் கவனிக்கும் போது இத்தாவின் நோக்கம் என்ன என்பது தெரியும்.
அதாவது ஒருவனுடைய கருவைச் சுமந்து கொண்டு அடுத்தவனை மணக்கக் கூடாது. கரு வளர்கிறதா இல்லையா என்று சந்தேகமான நிலையிலும் அடுத்தவனை மணக்கக் கூடாது. முதல் நிலையில் இறந்தவன் துரோகம் செய்யப்படுகிறான். இரண்டாம் நிலையில் புதிய கணவன் ஏமாற்றப்படுகிறான். எல்லா வகையிலும் ஏமாற்றுவதைத் தடை செய்த இஸ்லாம் இங்கேயும் அதற்குத் தடை விதித்திருக்கின்றது.
ஒருவன் தன் மனைவியுடன் சேர்ந்து அவள் கர்ப்பிணியாக காரணமாக இருக்கிறான். அவளது கருவறையில் வளரும் தனது குழந்தையை அவள் வளர்ப்பால் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் இதற்கு உடன்பட்டே அவனுடன் இணைகிறாள். இதைப் பச்சையாக சொல்லாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்திலேயே இது அடங்கி விடுகின்றது.
இந்த நிலையில் அவன் இறந்து விடும்போது அவனது குழந்தையைப் பெற்றெடுப்பதும், அதற்கு இடையூறு ஏற்படாமல் காப்பதும் அவளது கடமையாகின்றது. அவள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மற்றொருவனை மணக்கும் போது அந்த குழந்தை பாதுகாப்பற்ற நிலைக்கு வருகிறது.
கர்ப்பிணியா இல்லையா என்று தெரியாத நிலையில் கணவனை இப்ந்த உடனே அவள் மறுமணம் செய்தால் ஒருவேளை முதல் கணவன் மூலம் குழந்தை உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் தனக்குச் சம்பந்தமில்லாத குழந்தைக்கு மற்றொருவன் தந்தையாக்கப்படும் மோசடி ஏற்படுகின்றது. இவனது சொத்துக்களுக்கு இவனுக்குப் பிறக்காதவன் வாரிசாகும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற நிலையை நீக்கி, உயர்வான நோக்கங்கள் இத்தாவின் பின்னே இருப்பதை சிந்திக்கும் போது விளங்கலாம்.
அப்படியானால் குழந்தை பெற முடியாத முதிர் வயது அடைந்தவளும், கணவனுடன் நீண்ட நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தவளும் ஏன் இத்தா இருக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும்.
"இத்தா' என்றால் மறுமணம் செய்வதை தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். முதிர் வயதுடையவள் எப்போதுமே மறுமணம் செய்யப் போவது கிடையாது என்பதால் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் மறுமணம் செய்யக் கூடாது என்பதால் அவளுக்கு எந்த இடையூறும் கிடையாது.
அவள் மறுமணத்தை விரும்பக் கூடியவளாக இருந்தால் அந்த வயதிலும் அப்போது இந்தக் காலக்கெடு அவசியமாகி விடுகின்றது. இல்லற வாழ்வில் தேற்றம் இருக்கும். அவள் குழந்தை பெறுவதற்கும், முதல் கணவன் மூலம் கருத்தறிப்பதற்கும் சாத்தியம் ஏற்பட்டு விடுகின்றது. இவள் வயதில் முதியவளாக இருந்தாலும் உடற்கட்டிலும் உணர்விலும் முதியவள் அல்ல. "இத்தா' என்பதை இருட்டறையில் அடைந்து கிடப்பது என்று சிலர் விளங்கியதால் கிழவிக்கு ஏன் இத்தா? என்கின்றனர்.
இத்தா என்றால் உடனே மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்தும் காலமே என்பதை விளங்கிக் கொண்டால் அந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிவிடும்.
எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாவிட்டால் ஏற்படும் மோசமான விளைவையும் சிந்திக்க வேண்டும்.
உடனேயே மறுமணத்தை விரும்பும் ஒருத்தி, தான் மாதவிடாய் நிற்கும் வயதை அடைந்து விட்டதாக பொய் சொல்லலாம். அதை மறுக்க வழியேதும் இராது. ஏனெனில் இந்தப் பருவம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக்கூடியது.
அல்லது ஒரு பெண் விதிவிலக்காக முதிர் வயதிலும் தாயாகி விடக்கூடும். உலகில் ஆங்காங்கே இது நடக்கத் தான் செய்கிறது. இப்படி விதிவிலக்காக முதல் கணவன் மூலம் முதிர் வயதில் அவள் கருத்தரித்திருந்தால் இரண்டாவது கணவன் ஏமாற்றப்படுகிறான். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் "இத்தா' இருக்க வேண்டுமென இஸ்லாம் சட்டத்தைப் பொதுவாக்கியது. கணவனுடன் நீண்ட நாட்களாக உறவு இன்றி இருந்தவள் ஏன் இத்தா இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். அதுவும் நிரூபிக்க முடியாததாகும். இதில் சலுகை வழங்கினால் அவசரத் திருமணத்திற்கு ஆசைப்படும் பெண் தனக்கு கணவருடன் பல ஆண்டுகள் உறவு கிடையாது என்று கூறலாம். இதை மறுக்க எந்த வழியும் இல்லாது போகும். இது போன்ற ஓட்டைகள் சட்டத்தில் இருந்தால் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவிடும் என்பதை நாம் விளங்கலாம். இந்தக் காரணங்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவை அல்ல. நாம் சிந்திக்கம் போது தோன்றியவை. காரணங்கள் நமக்குத் திருப்தியளிக்காவிட்டாலும், காரணமே நமக்குத் தெரியாவிட்டாலும் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.
"இத்தா' என்றால் மறுமணம் செய்வதைத் தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்பே நாம் கூறியுள்ளோம். அவள் மறுமணம் செய்யாமலும், அந்தக் காலகட்டத்தில் திருமண எண்ணத்தை ஏற்படுத்தும் அலங்காரகங்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும். அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்லக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. வீட்டுக்குள்ளே இருட்டறையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதும் இத்தாவின் அர்த்தமில்லை.
தலாக் விடப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இந்தக் கட்டத்தில் சர்வ சாதாரணமாக வெளியே வருகின்றனர். ஆனால் கணவன் இறந்த பிறகு இத்தா இருக்கும் போது மார்க்கம் கூறாத கட்டுப்பாடுகளை விதித்து விட்டனர்.
தலாக் விடப்பட்டவர்களுக்கு கணவன் இத்தா காலத்தில் செலவு செய்யக் கடமைப்பட்டுள்ளான். வெளியே செல்வதை அவன் தடுப்பதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் கணவனை இழந்தவளை அப்படித் தடுக்கத் தேவையில்லை.
அதையே அனுமதிப்பவர்கள் இதை மறுப்பது தான் விந்தையாக உள்ளது. இத்தா இருப்பவள் அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை
கணவனை இழந்த பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை :
உணர்வுகள் இருபாலினருக்கும் பொதுவானது அதில் ஏற்றத்தாழ்வு எதுவுமில்லை. என இஸ்லாம் பறைசாற்றியதோடு, விவாக விலக்கு செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்த ஒரு பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை வழங்கிய ஒரு சம்பவம்:
என் தந்தை அப்துல்லாஹ் இப்னு உத்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அர்கம் அஸ்ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று) உமர் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்து நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை. (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார்.
(பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக் ரளியல்லாஹு அன்ஹு சுபைஆ அவர்களிடம் வந்து, 'திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது" என்று கூறினார்கள்.
சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, ''நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி (நூல்கள் - புகாரி 3991, 4532, 4909, 4910, 5318-5320. முஸ்லிம் 2973)
கணவர் மரணிக்கும் போது கர்ப்பமாக இருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், கணவர் இறந்து நாற்பது நாள்களில் பிரசவித்தார் என வேறு அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமெனும் இறை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மேல்கண்ட நபிவழிச் செய்தியில் பல படிப்பினை உள்ளன.
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாவின் தவணை காலம் பிரசவிக்கும் வரையாகும். (கருத்து: அல்குர்ஆன் 65:4) கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்குப் பின் மறுமணம் செய்துகொள்ளலாம். உதிரப் போக்கிலிருந்து சுத்தமாகும் வரைக் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. பிரசவித்தப் பிறகு ஏற்படும் உதிரப் போக்கு உடலுறவுக்குத் தடையே தவிர திருமணத்திற்குத் தடை இல்லை.
மார்க்கத் தீர்ப்பு என்று யார் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தமக்குரிய மார்க்கத் தீர்ப்பை எங்கு பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தமக்குரிய மறுமணம் சட்டத்தைத் தெரிந்து கொள்கிறார்.
கணவனை இழந்து, பிரசவித்தவுடன் மறுமணம் செய்ய தயார்படுத்தி, பெண் பார்க்க வருபவர்களுக்காக தம்மை அலங்கரித்துக்கொண்டால் ஊராரின் இடித்துரைப்புக்கு ஆளாக நேருமே என்ற எண்ணமில்லை. - அன்றைய மக்களும் அவ்வாறு இல்லை என்பது தனிவிஷயம். - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படாமல் இவ்வாறு எதையும் பொருட்படுத்தாது பெண்மையின் உணர்வுக்கான உரிமைக்கு இஸ்லாமின் தீர்வு என்ன? எனக் கேட்டறிந்து செயல்பட்டனர்.
இன்று இந்த சூழ்நிலையில் ஒரு பெண் இருந்து அவர் மறுமணம் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்திக்கொண்டால், - இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படைப் பெண்ணுரிமைக்கு - இந்த சமூகமே தடைகற்களாக அமைந்து பழித்துரைப்பதை எழுத்தில் வடிக்க இயலாது. எனவே மறுமணத்தை ஊக்குவிப்போம். திருமணத்தின் நறுமணம் மறுமணத்திலும் உண்டு
- இது இணையத்தில் வெளியான பல கட்டுரைகளின் தொகுப்பு.
http://www.nidur.info/